Welcome to Alumni & Corporate Relations
IIT-M, Anna University: அதிகரிக்கும் தொற்று, பிற கல்லூரிகளில் குறையும் மாணவர் வருகை / IIT-M, Anna University: Increasing infection, declining student attendance at other colleges

சென்னை IIT-யில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 200 –ஐ நெருங்கியது. நேற்று மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் யு.ஜி மற்றும் பி.ஜி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் வெகுவாகக் குறைந்துள்ளது.

சமீபத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே மாணவர்களின் வருகை மிகக் குறைவாகத்தான் இருந்து வந்தது.

இந்த நிலையில், IIT வளாகத்தில் சமீபத்தில் பலருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பதும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும், திங்கள் முதல் மாணவர் வருகைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (AUT) தலைவர் ஊடகங்களிடம் கூறுகையில், மாணவர்கள் தொற்றுநோய்க்கு பயந்து கல்லூரிகளுக்கு வர தயங்குவதால், பல கல்லூரிகள், குறிப்பாக மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்றார். சில கல்லூரிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

IIT-M மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தொற்று அதிகரிப்பால், ஆசிரியர்களும் கல்லூரிகளுக்கு வர தயங்குகிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் வகுப்புகளுக்கு வராத நிலையில், பேராசிரியர்கள், அந்தந்த கல்வி நிறுவனத்திற்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பிச் செல்கிறார்கள்.

முன்னதாக, கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், டிசம்பர் 2 முதல் இறுதி ஆண்டு யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கு தமிழகத்தில் (Tamil Nadu) வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், சென்னை IIT-யில் ஏற்பட்டுள்ள தொற்றின் அதிகரிப்பு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், IIT-M-ல் தொற்று பரவி இருப்பதைப் பார்த்த பிறகு, கல்வி நிறுவனங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த அளவில் தொற்று பரவக்கூடுமோ என்ற அச்சம் உள்ளது. IIT-M மிகச்சிறந்த வகையில் பராமரிக்கப்படும் வளாகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

கல்வி நிறுவனங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை அதிகமாக இருந்தால், அனைத்து கல்வி நடவடிக்கைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை இடைநீக்கம் செய்யப்படும் என்று அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.