Welcome to Alumni & Corporate Relations
வணிகக் கணக்கியல்: ஐஐடி சென்னையில் புதிய ஆன்லைன் படிப்பு தொடக்கம் (Business Accounting: IIT Madras launches new online course)

வணிகக் கணக்கியல் செயல்முறை என்ற பெயரில் ஐஐடி சென்னையின் டிஜிட்டல் திறன்கள் மையம் சார்பில் புதிய ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் கற்றல்- கற்பித்தல் நடைமுறை பெருமளவில் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) டிஜிட்டல் திறன்கள் மையம் சார்பில், வணிகக் கணக்கியல் செயல்முறை (Business Accounting Process) என்னும் புதிய ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பின் முதன்மையான நோக்கம், நிதி மற்றும் கணக்கியலில் தங்களுடைய எதிர்காலத்தைத் தகவமைத்துக் கொள்ள விரும்பும் மாணவர்களை மேம்படுத்துவதாகும். ஓராண்டுக்குச் செயல்பாட்டில் உள்ள இந்தப் படிப்பில், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

இதுகுறித்து, டிஜிட்டல் திறன்கள் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான மங்களா சுந்தர் கூறும்போது, ”செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த மெய்நிகர் அலுவலகம் என்னும் கருத்தாக்கத்தில் இந்தப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, உருவகப்படுத்தப்பட்ட அலுவலகச் சூழலை இந்தப் படிப்பு அளிக்கும். அசலான கார்ப்பரேட் நிறுவனத்தில் 3 மாதங்கள் பணியாற்றும் அனுபவத்தையும் இந்தப் படிப்பு அளிக்கும். நாஸ்காமால் (NASSCOM) இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளும் சான்றிதழ் படிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.