ஐஐடி மெட்ராஸ் முதன்முதலாக நடத்திய ‘ஆன்லைன் பட்டமளிப்பு விழா’வில் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு கல்வியாண்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான 353 பிஎச்டி பட்டங்கள் அடங்கும். இந்தப் பட்டங்களில் பிஎச்டி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்த பிஎச்டி மற்றும் இரட்டை டிகிரி பிஎச்டி ஆகியன அடங்கும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றிலேயே முதல் தடவையாக ‘ஆன்லைன்-நேரடி கலப்பு’ முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தப்பட்டது. இந்த விழா நேரடியான பட்டமளிப்பு மற்றும் ஆன்லைன் பட்டமளிப்பு இரண்டும் கலந்ததாக முழுக்கமுழுக்க ஆன்லைனிலேயே நடைபெற்றது.
பட்டம் பெறுபவர்கள் எப்படி கலந்துரையாட முடியும் என்பது இதன்மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன.
நோபல் பரிசு பெற்றவரும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் கோட்பாடு இயற்பியல் இருக்கையின் வேந்தருமான பேராசிரியர் டேவிட் ஜே.குரோஸ் தலைமை விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொண்டார். ஐஐடி மெட்ராஸ் ஆளுநர்கள் குழுவின் தலைவரும், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான டாக்டர் பவர் கோயங்கா பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை ஏற்றார்.