நோயாளிகள் உடலில் நோய்கிருமிகள் அதிகரிக்கும் போது அதை எதிர்க்க அவர்கள் உடல் தீவிரமான நோயெதிர்ப்பு செயல்முறைகளை தூண்டிவிடும். இதனால் நோயாளிகள் உடலில் செல்கள் அழற்சி ஏற்படும். இந்த நிலையை மருத்துவர்கள் செப்சிஸ் என அழைப்பார்கள்.
செப்சிஸ் ஏற்பட்ட பின் நோயாளிகள் உடல்நிலை மோசமடையும். அவர்களது உடல் உறுப்புகள் செயலிழக்க துவங்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும்.
உலகளவில் ஐந்தில் ஒருவர் செப்சிஸ் காரணமாக உயிரிழக்கிறார்கள். கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 5 கோடி மக்கள் செப்சிஸால் பாதிக்கப்பட்டனர்.
மனித உடலில் செப்சிஸ் ஏற்படக்கூடிய நேரத்தை துல்லியமாக கண்டுபிடித்தால் அதை மருத்துவர்கள் முன்பே தடுக்க வழி ஏற்படும். இதனால் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் இதுவரை மருத்துவ உலகில் இல்லை.
அதற்கு தீர்வாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி உடலில் நோய்கிருமிகள் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணித்து செப்சிஸ் பாதிப்பை முன்பே கணித்து கூறிவிடும்.
சென்னை ஐஐடி -இன் இயந்திர பொறியியல் துறையின் பேராசிரியர் ஆஷிஸ் குமார் சென், இது குறித்து கூறுகையில்:
இந்த கருவி ரத்த பிளாஸ்மாவில் உள்ள வாயு மின்மாற்றிகளான -ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் பெராக்சைடு , நைட்ரிக் ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றின் அளவை அளவிடுகிறது. அவை உடலில் செப்சிஸ் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் பயோமார்கர்ஸ் (Biomarkers) ஆகும்.
தற்போது உடலில் செப்சிஸ் ஏற்பட்டுள்ளதை அறிய குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவைப்படும். ரத்தத்தில் உள்ள இந்த பயோமார்க்ஸரையும் தொடர்ந்து கண்காணிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை இல்லை. இங்குதான் எங்கள் தொழில்நுட்பம் வருகிறது.
சில நோயாளிகள் உடலில் அறுவை சிகிச்சையின் போது செப்சிஸிற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும். அப்போது அவர்கள் ரத்தத்தின் வாயு மின்மாற்றியின் அளவில் விரைவாக மாற்றம் ஏற்பட்டு செல்களின் அழற்சி தொடங்குகிறது, அவற்றை தொடர்ந்து கண்காணிக்க கருவி இருந்தால் செப்சிஸை உடனடியாக தடுக்க முடியும் என்று ஆஷிஸ் குமார் சென் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி,அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் பயோமெடிக்கல் ஸ்டடீஸ் ஆகியவை இணைந்து இந்த கருவியை உருவாக்கியுள்ளன.
இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு ஆராய்ச்சி குழு விண்ணப்பித்துள்ளது. இந்த கருவி விலங்குகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட நிலையில் இந்த தொழில்நுட்பத்தை சரிபார்க்க ஒரு மாதிரி வடிவமைப்பை தயாரிக்க ஒரு தொழில்துறை கூட்டாளருக்காக ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்கிறார்கள்.
‘இம்பிரிண்ட்’ திட்டத்தின் (‘IMPRINT’ scheme ) கீழ், நிதியளிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி ‘எஸ்.ஐ.டி.ஏ.ஆர்.இ -காந்தியன் இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருது 2020’ ஐ வென்றது குறிப்பிடத்தக்கது.