சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் பரவிய கொரோனா வைரஸ், கணிசமாக குறைந்ததால், மாணவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.
சென்னை ஐ.ஐ.டி.,யில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் தங்கி உள்ளனர். இவர்களில், கேரளாவில் இருந்து வந்த மாணவருக்கு, கொரோனா பாதித்தது.தொடர்ந்து, 25 நாட்களில், 1,100 பேருக்கு பரிசோதனை செய்ததில், 220 பேருக்கு, கொரோனா பாதிப்பு இருந்தது. இதில், 198 பேர் மாணவ – மாணவியர்.அனைவருக்கும், கிண்டி, அரசு கிங்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து, ஐ.ஐ.டி., வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். சிகிச்சை, தனிமை என, 14 நாட்கள் முடிந்து, 200 பேர் சகஜ நிலைக்கு திரும்பினர்.
தற்போது, 20 பேர் சிகிச்சை மற்றும் தனிமையில் உள்ளனர்.ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, உணவு விடுதிகள் மூடப்பட்டு உள்ளன. மாணவ – மாணவியருக்கு, அவர்கள் தங்கி உள்ள விடுதி அறையில் உணவு வழங்கப்படுகிறது. அவர்கள், வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.யாருக்கும், வைரஸ் பாதிப்பு இல்லையென்ற நிலை உருவான பின், வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என, சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.ஐ.ஐ.டி., வளாகத்தில், 10 மருத்துவர்களுடன் கூடிய, 22 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் மாணவ – மாணவியரை மருத்துவக்குழு கண்காணித்திருக்க வேண்டும்.
இதில், கவனக்குறைவு சார்ந்த சில குளறுபடிகள் ஏற்பட்டதால், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இனிமேல் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாநகராட்சி மருத்துவர்கள், ஐ.ஐ.டி., வளாக மருத்துவர் களுக்கு தொடர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.